ஒரே நாளில் மாநகராட்சி நடவடிக்கை தூத்துக்குடியில் 231 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடி, நவ. 7: தூத்துக்குடியில் மாநகராட்சி நிர்வாகம் ஒரே நாளில் 231 ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணி அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாக அதிக அளவில் போக்குவரத்துமிகுந்த வீதிகள், சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பொருட்டு புதன்கிழமை தோறும் செல்லும் மாநகராட்சி அதிகாரிகள், தாமாகவே அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். அதன்பிறகும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை மறுவாரம் சென்று அகற்றி வருகின்றனர். அந்தவகையில் கடந்த புதன்கிழமையன்று தூத்துக்குடி விஇ ரோடு முதல் 4ம் கேட் பகுதி, 2ம்கேட் முதல் வட்டக்கோவில், போல்பேட்டை 60 அடி ரோடு முதல்ல அமெரிக்கன் மருத்துவமனை வரையில் உள்ள பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் 231 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளில் பலர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தனர். ஆனால் எச்சரிக்கை விடுத்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் இருந்தை அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பொக்லைன், ஜேசிபி உதவியுடன் அகற்றினர். இதில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 105, வடக்கு மண்டலம்-58, கிழக்கு மண்டலம்-68 என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் 231 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இப்பணியில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் ராமச்சந்திரன், தனசிங், காந்திமதி முன்னிலையில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு புதன்கிழமை தோறும் இதுபோன்ற வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் பாரபட்சம்: இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள், நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றியதில் ஒருசில பகுதிகளில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரது ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளுக்கு வந்த போன்கால்களின் அடிப்படையில் விதிவிலக்காக விடப்பட்டுள்ளதாகவும், விவிடி மெயின்ரோட்டில் தனியார் இரவு விடுதி முன்பாக காணப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள், அத்துடன் ஓட்டலின் உள்ளே இருந்த அடுப்பு உள்ளிட்ட பொருட்களையும் இடித்து தள்ளியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories:

>