×

மாவட்டம் முழுவதும் சம்பிரதாயத்திற்கு நடக்கும் கிராம சபை கூட்டங்கள்

சிவகங்கை, நவ. 7:  சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபை கூட்டங்கள் சம்பிரதாய அளவிலேயே நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் 445 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் ஒன்று முதல் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஊராட்சி மன்றங்கள் மூலமே செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் முன்பும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படும் போதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவை தவிர அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்கள் கட்டாயமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் கிராமத்தினர் தங்கள் இருக்கும் பிரச்னைகள், அடிப்படை வசதி தேவைகள், ஊராட்சி மன்றங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்புவர். இதில் காரசார விவாதங்கள் நடக்கும். இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை ஊழியர்களில் ஒருவர் கலந்து கொண்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், தீர்மானங்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அளிக்கிறார். ஆண்டுதோறும் கட்டாயமாக நடத்தப்படும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் 90 சதவீதம் தற்போது கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளன.

கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதை கிராம மக்கள் பெரிதாக நினைப்பதில்லை. இதனால் தற்போது இக்கூட்டங்கள் சம்பிரதாய அளவில் அரசின் பதிவிற்காக மட்டுமே நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது என்பதற்கான அறிவிப்புகளை கிராம மக்கள் அறியும்படி அறிவிப்பு வெளியிடுவதில்லை. முன்பு கூட்டம் நடக்க உள்ளதை போஸ்டர்கள், மைக் செட் மூலம் தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். ஆனால் தற்போது இதுபோன்ற எந்த அறிவிப்புகளும் இல்லை. இதனால் கூட்டங்கள் நடப்பதே மக்களுக்கு தெரிவதில்லை. மேலும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதும் மக்கள் கண்டுகொள்ளாததற்கு காரணம்.
அரசியல் கட்சி பிரமுகர் கூறியதாவது: சாலை வசதி, கண்மாய், கால்வாய், அரசு இடம் ஆக்கிரமிப்பு, சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு, சுடுகாட்டிற்கு பட்டா போட்டு எடுத்துக்கொண்ட தனியார், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இவைகளில் பெரும்பாலான கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. கூட்டம் நடத்த துறை சார்ந்த கடைநிலை ஊழியர்களே வருகின்றனர். அவர்களும், நான் எதுவும் கூற முடியாது. உங்கள் கோரிக்கைகளை பதிவு செய்து கொள்வேன், எனக்கு எந்த பொறுப்பும் இல்லை என மறைமுகமாக கூறிவிடுவார். இதனால் இக்கூட்டங்கள் வெறும் சம்பிரதாய அளவிலேயே நடக்கின்றன. கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமையாக நிவைவேற்றவும், பயனுள்ள வகையில் கூட்டத்தை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Tags : Gram Sabha ,meetings ,district ,
× RELATED மோசமான வானிலை மபியில் தங்கினார் ராகுல் காந்தி