×

ஆமைவேகத்தில் நடக்கும் சுரங்கப்பாதை பணி வள்ளியூரில் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம்

வள்ளியூர், நவ. 7: நெல்லை - கன்னியாகுமரி இடையே வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று, வள்ளியூர். இங்கிருந்து தொழில் ரீதியாக வியாபாரிகளும், கல்வி பயில்வதற்காக மாணவ, மாணவிகளும் தினமும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். வள்ளியூரில் இருந்து கூடங்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக வள்ளியூர் கிழக்கு   பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கிராசிங்கை கடந்துதான் செல்ல வேண்டும். இவ்வழியாக ரயில்கள் செல்லும்போது கேட் அடைக்கப்படுவதால் காத்திருக்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் தரைதள மேம்பாலம் அமைக்க வேண்டும் என   பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.   இதையேற்று ரயில்வே துறை, கடந்த 2017 ஜூனில் ரூ.4.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கியது. அப்பகுதியில் போக்குவரத்துக்காக தற்காலிக சாலையும் அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி முதல் சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரயில்வே பணிகளை தொடர்ந்து தரைதளம் மற்றும் சாலைகள் அமைக்க தமிழக பொதுப்பணிதுறை மூலம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பமானது. ஆனால் இந்த பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிக  சாலையில்  கல்லூரி பஸ்சும், டேங்கர் லாரியும் சிக்கியது. அப்போது ரயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பஸ்கள் அனைத்து தெற்குவள்ளியூர் வழியாக திருப்பி விடப்பட்டன. ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர   வாகனங்கள் மட்டும் தற்காலிக சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் இப்பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக தற்காலிக சாலையும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அப்பகுதியில் வாறுகால் அமைக்கப்படாததால் மழைநீர் சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீரும், மழை தண்ணீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக மாறி தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. சேதமடைந்த சாலைகள் மற்றும் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் சாகச பயணம் செய்கின்றனர். ஒரு சிலர், தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் தற்காலிக சாலையை சீரமைப்பதுடன் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valliyur ,
× RELATED அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!