×

கூடங்குளத்தில் பல்லாங்குழியான கடற்கரை தேசிய சாலை

ராதாபுரம், நவ. 7: கூடங்குளம்- செட்டிகுளம் பகுதியில் தொடர் மழை காரணமாக கடற்கரை தேசிய சாலை பல்லாங்குழியாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி முதல் சென்னை வரை கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் இருந்தும், கேரள பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி, வேளாங்கண்ணி, தூத்துக்குடி போன்ற நகரங்களை அடைய சாலை மார்க்கமாக பயணம் செய்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ராட்சத கருவிகள், உபகரணங்கள் சாலை மார்க்கமாக கொண்டு வர இந்த சாலையைதான் அணுமின் நிலைய நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. பேரிடர்கள் ஏற்படினும் இந்த சாலை பயன்படும் என்ற அரசின் செயல்திட்டத்தின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பல இடங்களில் உருக்குலைந்த நிலையில் நடந்து செல்ல கூட பயனில்லாத நிலையில் உள்ளது. கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக செட்டிகுளம் முதல் கூடங்குளம் வரையிலான பகுதியில் சாலைகள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தள்ளாடியபடி ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதான இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Pallanguzha Beach National Road ,Kudankulam ,
× RELATED கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு