×

கும்பகோணத்தில் தட்டுப்பாடு அதிகரிப்பால் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த ஆந்திர கருவேப்பிலை கிலோ ரூ.40க்கு விற்பனை

கும்பகோணம், நவ. 7: தஞ்சை மாவட்டத்தில் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக ஆந்திராவை சேர்ந்த கருவேப்பி–்லை வந்தது. ஒரு கிலோ கருவேப்பிலை ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.கருவேப்பிலை பாரம்பரியமான சமையல் முறைக்கு பிரதானமாகும். கருவேப்பிலைக்கு என்று தனித்துவமான மணமும், சுவையும் உள்ளது. சைவ பிரியர்களாக இருந்தாலும் சரி, அசைவ பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம் பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நாம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கிறோம். கருவேப்பிலை சமைக்கும்போது மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும்போதே நல்ல வாசனை அளிக்க கூடியது.இதன் பழத்திலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்து இந்த செடியை வளர்ப்பதற்கென்று தனியாக எந்த முயற்சியும் எடுக்க தேவையில்லை. ஒரு முறை நட்டு வைத்தால் அதன் பழங்கள் பழுத்து கீழே விழுவதால் எண்ணற்ற செடிகள் வளர்ந்து விடுகின்றன. கருவேப்பிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமானோர் பயிரிட்டு வருகின்றனர். மேலும் வீடுகளிலும், வீட்டு தோட்டங்களிலும் வளர்க்கப்படும் கருவேப்பிலை மரங்களின் நுனிக்கிளைகளை பறித்து பயன்படுத்துவர். கருவேப்பிலையில் இருவகைகள் உள்ளன. ஒன்று நாட்டு கருவேப்பிலை, மற்றொன்று காட்டு கருவேப்பிலை. நாட்டு கருவேப்பிலை உணவுக்கும், காட்டு கருவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.

கருவேப்பிலை சாப்பிடுவதால் ரத்த சோகை குணமாகிறது. வயிற்றுபோக்கு மற்றும் மூலநோய்க்கும், குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்கும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் கதிரியிக்கம் மற்றும் வேதிசிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கிறது. தோலில் ஏற்படும் சரும நோயை குணப்படுத்துகிறது, கண் பார்வையை குறையாமல் தடுக்கிறது. கல்லீரலை பாதுகாக்கிறது, கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதய நோய்களில இருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. நீரிழிவு நோய்க்கு தீர்வு கிடைக்கிறது, செரிமான மண்டலத்துககு நல்லதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற கருவேப்பிலை தமிழ்நாட்டில் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்தாண்டுகளில் 50 ஏக்கருக்கு மேல் கருவேப்பிலையை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் கோடை காலத்தையொட்டி வாய்க்கால், ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்துக்கு போனதால் தஞ்சை மாவட்டத்தில் கடந்தாண்டுகளில் கருவேப்பிலை சாகுபடி செய்யாமல் தவிர்த்தனர்.வீடுகள் மற்றும் உணவு விடுதிகளில் சமைக்கும் உணவுக்கு கட்டாயமாக கருவேப்பிலையை பயன்படுத்துவதால் தட்டுப்பாட்டை போக்க கும்பகோணம் அடுத்த தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து கருவேப்பிலை லாரிகள் மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.பின்னர் அதை பிரித்து தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலுார் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட கருவேப்பிலை தற்போது ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.எனவே கருவேப்பிலை தட்டுப்பாட்டை போக்க விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யவும், அரசு வங்கிகளில் கடனுதவி வழங்கி கருவேப்பிலை சாகுபடியை அழியாமல் காப்பாற்ற வேண்டுமென வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Andhra Pradesh Vegetable Market Andhra Govt ,
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு