×

கங்கைகொண்டசோழபுரத்தில் 11ம் தேதி அன்னாபிஷேகம் முன்னேற்பாடு மும்முரம்

ஜெயங்கொண்டம், நவ.7: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழமாமன்னன் முதலாம் ராஜேந்திரசோழனால் (கிபி-1012-1044) கங்கைவரை வெற்றி பெற்றதன் அடையாளமாக பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. ஐக்கிய நாடு சபையின் யுனெஸ்கோவால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டினர் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள வெளிநாட்டினர் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ்ட்சர்லாந்து, உள்ளிட்ட வெளிநாட்டினரின் மனதில் நின்ற சிற்ப கலைகள் இன்றளவும் பேசப்படுகன்றன.உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் கோயிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து காலை 9 மணி முதல் கோயிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு சாதம் அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணியளவில் தீபாராதனை செய்யப்படும். லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டும் வரும் 11ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 9ஆம்தேதி காலை 9 மணிக்கு கணக்க விநாயகருக்கு மகாபிஷேகமும் தீபாராதனையும், 10ம் தேதிகாலை 9 மணிக்கு ருத்ரஹோமம், பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர், மற்றும் நவகிரகங்கள் அகியவற்றிற்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. மாலை 4 மணியளவில் மஹா மண்டபத்தில் திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. 11ஆம் தேதி காலையில் பிரகதீஸ்வரருக்கு 9 மணிக்கு துவங்கி அன்னம் சாத்தப்பட்டு மாலை வரை அன்னாபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னத்தினை பிரசாதமாக வழங்கப்படும்.மீதமுள்ள சாதத்தினை ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் மீன்களுக்கு உணவாக அளிக்கபப்டும். மேலும் 12ம் தேதி மூலவருக்கு ருத்ராபிஷேகமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



Tags : Anna ,Gangaikondasolupuram ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்