×

இளம்பிள்ளை ஏரி அருகே கொசு புழுக்களின் கூடாரமான கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி

இளம்பிள்ளை, நவ.7:  இளம்பிள்ளை அருகே ஏரியை சுற்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறியுள்ளது. இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் 35 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு₹2 கோடி 36 லட்சம் மதிப்பில் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வந்தது. ஏரியை தூய்மைப்படுத்தி அதன் கழிவுகளை கொண்டு பயோகேஸ் மூலம் மின்சாரம் எடுத்து பேரூராட்சி பகுதியில் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டது. மேலும், சுத்திகரிப்பு தொட்டிகள் மூலம் தண்ணீரை தூய்மைப்படுத்தி ஏரியில் விடவும் பணிகள் நடந்து வந்தன.

ஆனால், இந்தப் பணிகள் முழுமையாக செய்யப்படாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இளம்பிள்ளை ஏரியில் கட்டப்பட்ட 110 சேகரிப்பு தொட்டிளில் தண்ணீர் நிரம்பி கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால், இளம்பிள்ளை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. மேலும், 2 கோடி 36 லட்சம் அரசு நிதி ஒதுக்கியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால், அரசு பணம் வீணாகி வருகிறது. இளம்பிள்ளை பகுதியில் இடிக்கப்படும் கட்டுமான கழிவுகளை சுத்திகரிப்பு தொட்டியில் போட்டு வருகின்றனர். இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டறிந்து. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ilampillai Lake ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்