×

போக்குவரத்து பாதிப்பால் வாக்குவாதம் போலீஸ் ஸ்டேசனை விவசாயிகள் முற்றுகை

ஆத்தூர், நவ.7: தலைவாசல் காய்கறி மார்க்கெட்டில் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, விவசாயிகள் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். தலைவாசலில் உள்ள காய்கறி மார்க்கெட், தமிழகத்திலேயே 2வது பெரிய காய்கறி மார்க்கெட்டாகும். இந்த மார்க்கெட்டிற்கு போதிய இடவசதி இல்லாததால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில், வாகனங்களை நிறுத்தி அங்கேயே விற்பனை செய்கின்றனர். இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை சந்தையில் வழக்கம்போல விவசாயிகள், விளைபொருட்களை சர்வீஸ் சாலையில் நிறுத்தி விற்பனை செய்தனர். அப்போது, காய்கறிகளை வாங்குவதற்கு வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால், அந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை அங்கிருந்து சந்தையின் உள்பகுதிக்கு செல்லுமாறு கூறினர். அப்போது, விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், விவசாயி ஒருவரை போலீசார் தலைவாசல் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்த தகவலறிந்த விவசாயிகள் தலைவாசல் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். இதையடுத்து, தலைவாசல் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த விவசாயியை விடுவித்தார். இச்சம்பவத்தால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Farmers blockade police station ,
× RELATED போக்குவரத்து பாதிப்பால் வாக்குவாதம் போலீஸ் ஸ்டேசனை விவசாயிகள் முற்றுகை