×

சின்னவெங்காயத்தில் கருகல் நோய் தடுக்கும் வழிமுறைகள்

திருச்செங்கோடு, நவ.7: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சின்ன வெங்காயத்தில் கருகல் நோயை தடுப்பது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி  இயக்குனர் ஆலோசனை வழங்கியுள்ளார். திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் வட்டாரத்தில், சின்னவெங்காயம் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது 10 முதல் 40 நாள் வயதுடைய பயிர்கள் சாகுபடியில் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர்மழையால் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகிறது.  இதனால் ஒரு சில பகுதிகளில் சின்னவெங்காய பயிர், கருகல் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நோயானது கொலிட்டோடிரைக்கம் எனப்படும் ஒருவகை பூஞ்சை மூலம் தோன்றுகிறது. இந்நோய் கொலிட்டோடிரைக்கம் கருகல் நோய், பறவை கண் நோய் எனவும் அழைக்கப்படும். இப்பூஞ்சை பாதிப்பு செடிகளின் தாள்களில் வெளிர் மஞ்சள் நிற நீள்வட்ட புள்ளிகள் தோன்றுவதோடு, பாதிக்கப்பட்ட தாள்கள் மடிந்து தொங்கும். அடுத்தகட்டமாக சின்ன வெங்காயத்தின் கழுத்து பகுதி நீண்டு குமிழங்கள் சிறுத்து காணப்படும்.

இந்த  தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும். முற்றிலும் பாதிப்புக்குள்ளான பயிரை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது. ஆனால், மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம். இதற்கு கருகல் நோய் தாக்குதல் தென்பட்டவுடன், பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அப்புறப்படுத்தி விட்டு பூஞ்சாணக் கொல்லிக்களை தெளிக்கவேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு கார்பெண்டாசிம் பூஞ்சணாக் கொல்லி 1கிராம் என்ற அளவில் கலந்து, செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்கலாம். மாற்றாக, புரோபிகோனசோல் 25 ஈசி அல்லது 5 ஈசி இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சணா கொல்லியை ஏக்கருக்கு 200 மீ.லி. வீதம் இலை வழியாக தெளிக்கலாம். 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
 
 வெங்காயம் நடவிற்கு முன்னர் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது ஹார்சியானம் என்ற பூஞ்சணா கொல்லியை உபயோகித்து, விதைநேர்த்தி செய்து  பின் விதைப்பு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 1 கிலோ வீதம் 200 கிலோ தொழு உரத்துடன் கலந்து நிலத்தில் இடுவதன் மூலம் பாதிப்பு ஏற்படுத்தும் கோலிட்டோடிரைக்கம் பூஞ்சையின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் பொறுக்கி காயவைத்து எரித்துவிட வேண்டும். இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் நவாஸ்  தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு