தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை

நாமக்கல், நவ.7:  தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு, கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல்லில்,  மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் மெகராஜ், காகித  அட்டை கூழ் தயாரித்தல், விசைத்தறி, கோழித்தீவனம் தயாரித்தல்,  நெசவுத்தொழில், கொசுவலை உற்பத்தி ஆகிய தொழில்களை தொடங்க 5 தொழில்  முனைவோர்களுக்கு ₹59.12 லட்சத்துக்கான ஒப்புவிப்பு ஆணைகளை வழங்கி  பேசியதாவது: நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்தி, ஆழ்துளை கிணறு  அமைக்கும் இயந்திரங்கள் உற்பத்தி, ஆழ்துளை கிணறு அமைத்தல், துணி உற்பத்தி, கனரக வாகன தொழில், கனரக வாகனங்களுக்கு கூண்டு  கட்டுதல், ஜவ்வரிசி உற்பத்தி(சேகோ) ஆகியவற்றில், மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து  வருகிறது.

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நடத்தப்படும் பயிற்சிகளின்  மூலம், படித்த இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிப்பதுடன்,  வங்கி கடன் உதவிக்கு பரிந்துரை செய்து, அதன் அடிப்படையில் சிறு,குறு  நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் நாமக்கல் மாவட்டத்தில்  ஏராளமானோர், சிறந்த தொழில் முனைவோராக பல தொழில்களில் முன்னேற்றம்  அடைந்துள்ளனர். தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை  அளிக்கப்பட்டு, பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வாங்கிய கடனை தவறாமல் திருப்பி செலுத்தவேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் பேசினார். விழாவில் சிறந்த தொழில்முனைவோருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, தாட்கோ மாவட்ட மேலாளர் சரவணகுமார்,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் இளங்கோ,  செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>