×

முதலைப்பட்டியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட எதிர்ப்பு வியாபாரிகள் 11ம் தேதி கடையடைப்பு போராட்டம்

நாமக்கல், நவ.7: நாமக்கல்லில் புது பஸ் ஸ்டாண்ட் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, வரும் 11ம் தேதி கடையடைப்பு போராட்டம்  நடத்த வியாபாரிகள் உள்பட பல்வேறு அமைப்பினர்  முடிவு செய்துள்ளனர். நாமக்கல் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புதிய புறநகர் பஸ்ஸ்டாண்ட் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தார். புது பஸ் ஸ்டாண்ட் கட்ட, நாமக்கல்லில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள முதலைப்பட்டியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை, நகராட்சி நிர்வாகம் ₹8 கோடி கொடுத்து வாங்கியது.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, முதலைப்பட்டியில் தனியார் நிறுவனம் மூலம் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க, கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. புது பஸ்ஸ்டாண்ட் அமையும் இடத்தில், இணைப்பு சாலை அமைக்க இடம் கிடைக்காததால்,  திட்டம் அறிவிக்கப்பட்டு 6 ஆண்டாகியும் செயல்படுத்த முடியவில்லை. நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர், இணைப்பு சாலைக்கு 0.83 ஏக்கர் நிலத்தை, முதலைப்பட்டி பகுதி மக்களிடம் இருந்து தானமாக, சில மாதத்துக்கு முன் பெற்று கொடுத்தார். மீதியுள்ள ஒரு ஏக்கர் நிலமும் நகராட்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு விட்டது.  இதனால் புது பஸ்ஸ்டாண்ட் அமைக்க இருந்த இடையூறுகள் நீங்கியது.

இதை தொடர்ந்து, சுமார் 40 கோடி மதிப்பில் புது பஸ் ஸ்டாண்ட், தனியார் நிறுவனத்தின் மூலம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்த ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும்படி, நகராட்சி கமிஷனர் சுதா, கடந்த மாதம் நகராட்சியின் இணையதள பக்கத்தில்  அறிவிப்பு வெளியிட்டார். நகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் கூட, இதுபற்றி அறிவிப்பு வெளியிடாமல், இணையதள பக்கத்தில் வெளியிட்டது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாமக்கல்லில் பல்வேறு வர்த்தக அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷேக்நவீத் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், புது பஸ் ஸ்டாண்ட், நகரில் இருந்து வெகுதொலைவில் சென்றால் மக்களுக்கு பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, முதலைப்பட்டியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும் 11ம் தேதி நகரில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது. பின்னர், கலெக்டர், நகராட்சி கமிஷனரை சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. ரிங் ரோடு அமைத்த பிறகு, புது பஸ் ஸ்டாண்டை நாமக்கல்லில் கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், செல்போன் வியாபாரிகள் சங்க தலைவர் வாசு சீனிவாசன், தமாகா சக்தி வெங்கடேஷ் மற்றும் பாத்திரக்கடை, மளிகைக்கடை, பெயிண்ட் கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், பஸ் ஸ்டாண்ட் கடை உரிமையாளர்கள், பல்வேறு வர்த்தக அமைப்பின் நிர்வாகிகள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை. நாமக்கல் நகரில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பிரச்னை, கடந்த 6 ஆண்டாக நீடித்து வருகிறது. அனைத்து இடையூறுகளையும் நகராட்சி அதிகாரிகள் சாதுர்யமாக சமாளித்து, தற்போது டெண்டர் விடும் நிலைக்கு புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை கொண்டு சென்றுவிட்டனர். இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்து விட்டு, தற்போது கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஒரு சில அமைப்புகள் அறிவித்துள்ளது, புதிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : protest ,bus stand ,Crocodile Bar ,
× RELATED ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்