×

தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் வெறிச்சோடி காணப்படும் விசைத்தறி கூடங்கள்

பள்ளிபாளையம், நவ.7: தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தொகையை, கடந்த ஆண்டைவிட குறைத்து கொடுத்ததால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள்,  பண்டிகைக்கு பின் மீண்டும் விசைத்தறி கூடங்களுக்கு திரும்பவில்லை. இதனால் 30 தறிப்பட்டறைகள் திறக்கப்படாமல் உள்ளது. இன்று (7ம்தேதி) காலை 11 மணிக்கு சேலம் தொழிலாளர் நல அலுவலர் சங்கீதா முன்னிலையில்  பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, இந்தாண்டு 9 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுமென, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது. இதை தொழிற்சங்கம் ஏற்கவில்லை. கடந்தாண்டு கொடுக்கப்பட்ட 9.5 சதவீதம் தொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது. ஆனால் அதை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்கவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி போனஸ் வழங்கினர். இதனால் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் அதிருப்தியடைந்தனர். காவேரி, வசந்த நகர், ஆயக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 30 விசைத்தறி கூடங்கள் தீபாவளி பண்டிகை முடிந்து, ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.

இந்த பட்டறைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலரும் நேற்று காவேரியில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட விசைத்தறி தொழிற்சங்க செயலாளர் அசோகன், துணைச் செயலாளர் மோகன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தீபாவளி பண்டிகைக்கு போனஸ் குறைத்து வழங்கியது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கடந்தாண்டு வழங்கப்பட்ட போனஸ் தொகையை கூட வழங்கவில்லை.
இன்று (7ம்தேதி) காலை 11 மணிக்கு சேலம் தொழிலாளர் நல அலுவலர் சங்கீதா முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஏற்படும் முடிவையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று, பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தியிடம், தொழிற்சங்க செயலாளர் அசோகன் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் போனஸ் பிரச்னை தொடர்பாக மூடப்பட்டுள்ள விசைத்தறி கூடங்களில், தற்காலிக தொழிலாளர்களை கொண்டு தறிகளை இயக்க முயற்சிகள் நடக்கிறது. தொழிலாளர்களின் போனஸ் பிரச்னையை தீர்க்காமல், புதிய தொழிலாளர்களை கொண்டு தறிக்கூடங்களை இயக்க தடை விதிக்க வேண்டுமென அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்