×

காரைக்கால் பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்

காரைக்கால், நவ. 7:   காரைக்கால் மாவட்ட பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்ட ஓராண்டில் காட்சிப்பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை சீரமைத்து தர வேண்டும் என பயணிகள் காத்திருக்கின்றனர். காரைக்கால் மாவட்ட பேருந்து நிலையத்தில் பெங்களூர், திருப்பதி, சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தொலைதூர வழித்தடங்களிலும் நாகூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட அண்டை மாவட்ட முக்கிய ஊர்களுக்கும் அதிகமான பயணிகள் பேருந்தில் தினசரி சென்றுவருகின்றனர்.அவ்வாறு சென்றுவரும் பயணிகளுக்கு நல்ல குடிநீர் உண்டு என்றால் இல்லையென்றே கூறவேண்டும். பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் 90 சதவீதம் பயணிகள், அங்கு உள்ள குடிநீர் என எழுதியுள்ள பைப்பில் தண்ணீரை  குடித்து முகம் சுளித்து, பிறகு கடைகளில் விற்கும் மினரல் வாட்டரைதான் வாங்கி குடித்து செல்கின்றனர். மீதமுள்ள 10 சதவீதம் பயணிகள் வேறு வழியின்றி, நாற்றம் அடிக்கும் அந்த குடிநீரைதான் குடித்துவிட்டு நோயை இலவசமாக வாங்கிசெல்கின்றனர். பேருந்து நிலைய பயணிகளின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, ரோட்டரி கிளப் ஆப் சென்டேனியல் சங்கமானது, கடந்த ஏப்ரல் 2018 அன்றுசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தையும், தாய்மார்கள் அமுதூட்டும் அறையையும் அமைத்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து, அப்போதையகலெக்டர் கேசவனால் திறந்து வைக்கப்பட்டது.

திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், அடிக்கடி பழுதாகிகடந்த டிசம்பர் 2018ல் முதல் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நின்று போனது. அதன் அருகில் சாதாரண நீருக்கான குழாயும் உள்ளது. மேற்கண்ட இரு  குடிநீர் குழாய்களுக்கு மேலே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பெயர்பலகை இருப்பதால் பலர் சாதாரண குழாயில் வரும் நீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நினைத்து குடித்து ஏமாந்து போகின்றனர். எனவே செயல்படாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை உடனே பழுதுபார்த்து, பயணிகளுக்கு 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். வருவது மழைக்காலம் என்பதால் இது மிக அவசியம் என்பதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, பயணி ஒருவர் கூறுகையில், பேருந்து நிலையம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட குடிநீர் அமைப்பு இருக்கவேண்டும். காரைக்கால் பேருந்து நிலையத்தில் ஒரேயொரு குடிநீர் குழாய்தான் உள்ளது. அதுவும் சுத்திகரிக்கப்பப்ட்ட குடிநீர் என ஏமாற்றி சாதாரண குடிநீரை வைத்துள்ளனர். நகராட்சி தன்னால் பராமரிப்பு பணியை செய்யமுடியாவிட்டால், அதே ரோட்டரி கிளப் ஆப் சென்டேனியல் சங்கத்திடமோ அல்லது வேறு சமூக அமைப்பிடமோ வழங்கினால் அவர்கள் முழுமையான பராமரிப்பை செய்வார்கள் என்றார்.

Tags : drinking water station ,bus stand ,Karaikal ,
× RELATED முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்