×

திண்டிவனம் அருகே வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

திண்டிவனம், நவ. 7: திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திண்டிவனம் அருகேயுள்ள மேல்பாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுத்தமான குடிநீர் இல்லாததால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் வாந்திபேதி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகம் மகன் நாகப்பன்(60), மணிவண்ணன் மனைவி சித்ரா (45), சிவக்குமார் மகன் யோகேஷ்(5), கோதைராமன் மகன் ராஜசேகர்(35), காத்தவராயன் மகன் ஏழுமலை(35),
பெருமாள் மனைவி அன்னம்மாள்(65), மணிவண்ணன் மகன் மண்ணு (70), நாராயணசாமி மகன் மதுரை (70) உள்ளிட்டோரை திண்டிவனம் வட்டாட்சியர் ரகோத்தமன் மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி விசாரித்தார்.
அப்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் சுத்தமான குடிநீர் வழங்கப்படாததால் மேல்பாக்கம் கிராமத்தில் ஏராளமானோருக்கு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.மேலும் 20க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். எனவே மேல்பாக்கம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...