பேரூராட்சி பகுதிகளில் அரசு மானியம் பெற்று வீடு கட்ட சிறப்பு முகாம்

கடலூர், நவ. 7:கடலூர் கோட்ட தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் பிரதம மந்திரியின் அவாஸ் யோஜானா “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலமாக தமிழ்நாட்டில் நகர்புறங்களில் வசிக்கும் வீடில்லா ஏழை மக்கள் தங்களது சொந்த இடத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் (ரூ.2.10 லட்சம்) பயனாளியின் பங்களிப்புடன் கூடிய வீடு கட்டிகொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1983 பயனாளிகள் மானியம் பெற்று வீடு கட்டி வருகின்றனர். அதில் 825 பயனாளிகள் தங்களது புதிதாக கட்டிய வீட்டில் குடியேறி பயனடைந்துள்ளனர். தற்போது கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி பகுதிகளில், இத்திட்டத்தை பேரூராட்சி மூலம் செயல்படுத்தியதில் விட்டுப்போன அல்லது பயன்பெறாத பயனாளிகள் தங்களது சொந்த மனையில் புதிதாக வீடு கட்டிக்கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பயனாளிகள் தேர்வு வரும் 8, 11 மற்றும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்ததிட்டத்தில் சேர பயனாளிகள் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட சொந்த இடத்தில் குடிசை அல்லது ஓட்டு வீட்டில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.

பயனாளிகளின் பெயரில் பட்டா அல்லது பத்திரம் இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினர் பெயரிலோ வேறு வீடு எதுவும் இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் இருக்கக்கூடாது. மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பட்டா அல்லது பத்திரம் ஆகியவற்றின் நகலுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி சிறப்பு முகாம் நடக்கும் விவரத்தை அந்தந்த பேரூராட்சி பகுதிகளில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>