×

பண்ணப்பட்டு கிராமத்தில் சேதமான கட்டிடத்தில் இயங்கும் துணை சுகாதார நிலையம்

சேத்தியாத்தோப்பு, நவ. 7:சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பண்ணப்பட்டு கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், குழந்தை வளர்ப்பு முறை பற்றிய விளக்கங்களும், தடுப்பூசி மருந்துகள், சுகாதாரத் துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இயங்கி வரும் துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தை சுற்றி முட்புதர்களும் செடி, கொடிகளும் புதர் மண்டி காட்சியளிக்கிறது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுப்புற கிராமங்களான அய்யனூர், கீழ செங்கல்மேடு, மேல செங்கல்மேடு உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து பயனடைந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் செவிலியர்களுக்கும், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் இக்கட்டிடம் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கு வெகுதூரத்தில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே, சேதமான கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்றும், துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு வைக்க வழிவகை செய்ய வேண்டும். பண்ணப்பட்டு கிராமத்தில் தங்கி சிகிச்சையளிக்க செவிலியர்களை நியமிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : sanitation center ,building ,village ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி