×

பண்ருட்டியில் பரபரப்பு அரசு பேருந்து அச்சு முறிந்தது

பண்ருட்டி, நவ. 7: விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த பேருந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் மாலை பயணிகளை ஏற்றிக் கொண்டு நெய்வேலிக்கு புறப்பட்டு வந்தது. பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு இரவு வந்து பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு நெய்வேலிக்கு புறப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் வழியில் வேகத்தடை உள்ளது. இதில் ஏறி இறங்கும்போது பேருந்தின் முன்புற சக்கரத்தை இணைக்கும் அச்சு முறிந்து பேருந்து அப்படியே நின்றுவிட்டது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் பேருந்தை இயக்க முடியவில்லை. இதை பார்த்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். தகவல் அறிந்ததும் பேருந்து நிலைய புறக்காவல் நிலைய தலைமை காவலர் சிவசங்கர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமஜெயம் ஆகியோர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு பொதுமக்கள் உதவியோடு பழுதடைந்த பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தினார்கள். இந்த சம்பவம் நெடுஞ்சாலையில் நடந்திருந்தால் மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அனைத்து அரசு பேருந்துகளும் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்திய பின்னரும் அதிகாரிகள் நஷ்டக்கணக்கு காட்டுகிறார்கள். புதிய பேருந்து கூட சில நேரங்களில் பழுதடைந்து நின்று விடுகிறது. இப்போதுள்ள பேருந்துகள் 10 முதல் 20 வருடம் வரை பழமையானவை. இதில் பிரேக் மாற்றப்படாமலும், பழைய டயர்களை வைத்து பேருந்து இயக்குதல், அமரும் சீட்டுகள் கிழிந்த நிலையிலும், கை பிடிகள் துரு பிடித்த நிலையிலும், மழைக்காலங்களில் பேருந்து மேற்கூரை ஒழுகுதல் ஆகிய பிரச்ைனகள் உள்ளது. இந்த நிலையில் பேருந்தில் பயணிகளை ஏற்றி செல்லும்போது அச்சத்தோடு பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே அரசு பேருந்துகள் அனைத்தையும் பழுதுபார்த்து விபத்தில்லாமல் இயக்க வேண்டும். அரசு பேருந்துகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கூறினார்கள்.



Tags : Panruti ,
× RELATED ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிய பாமக