×

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிர்க்க மேம்பாலங்கள் கட்ட வேண்டும்

தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களை தவிர்க்க, மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி அருகே சேலம்- பெங்களூரு பைபாஸ் சாலையில் இரு மார்க்கங்கள் வழியாகவும் தினமும் 30 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. குண்டல்பட்டி மற்றும் சேஷம்பட்டி சந்திப்பில் அடிக்கடி வாகனங்களால் விபத்து ஏற்பட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள் சவுளூர் வழியாகவும், சேஷம்பட்டியில் இருந்து தர்மபுரி வரும் வாகனங்கள் குடிப்பட்டி பாலம் வழியாகவும் திருப்பி விடப்பட்டது.

இதையடுத்து, இவ்விரு இடங்களிலும் விபத்துக்கள் நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது. இதே போல், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜருகு, பாளையம்புதூர், மாட்லாம்பட்டி, காரிமங்கலம் அருகே அகரம் ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றன.
பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், அகரம் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கும் ₹100 வரை கட்டணம் செலுத்தி வேகமாக பயணிக்கும் வாகனங்களை, பேரி கார்டு மூலம் தடுத்து வேகத்தை குறைப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக  சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜருகு, பாளையம்புதூர், மாட்லாம்பட்டி, காரிமங்கலம் அருகே அகரம் ஆகிய இடங்களில் பேரிகார்டு அமைப்பதை தவிர்த்து, மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,National Highway ,
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...