×

தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கு உடற்தகுதி தேர்வு தொடக்கம்

தர்மபுரி, நவ.7: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான 2ம் நிலை காவலருக்கு உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 900 இளைஞர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரியில், 2ம் நிலை ஆண் மற்றும் பெண் காவலர்கள், தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்தது. இதில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டவர்களில், மொத்தம் 3,748 பேர் தேர்வாகினர். அதில் 963 பேர் பெண்கள். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு, நேற்று தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது.

உடற்தகுதி தேர்வு வரும் 8ம் தேதி வரை ஆண்களுக்கும், 9ம் தேதி பெண்களுக்கும் நடக்கிறது. நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் 900 இளைஞர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 5 மணிக்கே ஆயுதப்படை மைதானம் முன் குவிந்தனர். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பு அளக்கப்பட்டது. தொடர்ந்து ஓட்டப்பந்தயம் நடந்தது. உடற்தகுதி தேர்வு முழுவதும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஐஜிக்கள் செந்தில்குமாரி, ஜெயபாரதி, எஸ்பி ராஜன், ஏடிஎஸ்பி ரவிக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், இந்த தகுதித்தேர்வை பார்வையிட்டனர். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 11ம்தேதி முதல் கயிறு ஏறும் தேர்வு, ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், பந்து மற்றும் வட்டு எறிதல் போன்ற தேர்வுகள் நடக்கிறது. தேர்வானவர்களுக்கு வரும் 14ம் தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் 15 இடங்களில் 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு நடக்கிறது. கோவை மண்டலத்தில் கோவை, சேலம், தர்மபுரி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்,’ என்றனர்.

Tags : Policemen ,Dharmapuri Armed Forces ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு