×

3.10 கோடியில் பஸ் ஸ்டாண்ட் ஏரியூரில் 70 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தர்மபுரி, நவ.7: தர்மபுரி அருகே ஏரியூரில் 3.10 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளதால், 70 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளது. பென்னாகரம் அருகே ஏரியூர் கிராமத்திற்கு தினசரி 20க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏரியூர் பகுதிக்கு வந்து செல்கின்றன. ஏரியூர், நெருப்பூர், ராமகொண்டஅள்ளி, அஜ்ஜிப்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 40 கிராம மக்கள், சுமார் 2 ஆயிரம் பேர் ஏரியூருக்கு பொருட்கள் வாங்கவும், வெளியூர் செல்லவும் இங்கு வந்து செல்கின்றனர். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல பென்னாகரம், மேச்சேரி போன்ற ஊர்களுக்கு வந்து தான் பஸ் ஏறிச்செல்ல வேண்டும். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் ஏரியூர் சந்தை மைதானத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி, பென்னாகரம் மற்றும் மேச்சேரி பஸ் நிலையங்களில் வந்து வெளியூர்களுக்கு செல்வார்கள். மேலும், மேச்சேரி, நாகமரை, பென்னாகரம், மூங்கில்மடுவு ஆகிய சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லவும் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வந்துதான் செல்ல வேண்டும்.

பஸ்கள் அதிகம் வந்து செல்வதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். எனவே, இப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, ஏரியூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் மலர்விழி ஆகியோர், புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்க, முறையான டெண்டர் விடப்பட்டது.

இதனிடையே, ஏரியூர் பஸ் நிலையம் அமையும் சாலையோரத்தில் உள்ள கடைகளை அகற்றும்படி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இதற்காக, பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்க ஒப்பந்ததாரர்கள் நேற்று நேரில் வந்து பார்த்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தங்களது கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து வியாபாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் கடைகளை அவர்களே அகற்றிக்கொண்டனர்.

Tags : Stores ,Bus Stand Aerore ,
× RELATED வில்லியனூர் அருகே மருத்துவ கழிவுகளை...