×

ரயில்வே பிளாட்பாரத்தில் நடைபயிற்சி செய்தால் அபராதம் ரயில்வே போலீசார் எச்சரிக்கை

உடுமலை,நவ.7: உடுமலை  ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பிளாட்பாரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டால் அபராதம்  விதிக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். உடுமலை நகரின்  மத்தியில் அமைந்துள்ளது ரயில்வே ஸ்டேஷன். இந்த ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு பொள்ளாச்சி வழியாக பழனி,  மதுரை, சென்னை மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு தினமும் ரயில்  இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ராமேஸ்வரத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்  வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.நகரின் மத்தியில் ரயில் நிலையம்  அமைந்திருப்பதாலும் ரயில் சேவை குறைந்த அளவே இருப்பதாலும் முதியோர்கள்  ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இளைஞர்கள் மாணவ,மாணவிகள் காலை மற்றும் மாலை வேளையில் ரயில் நிலையத்தில் உள்ள  பிளாட்பாரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதும் அங்கு அமைக்கப்பட்டுள்ள  பயணிகளின் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுப்பதும் வழக்கம்.இந்நிலையில்  ரயில் நிலையத்தில் பொது மக்களோடு பொது மக்களாக சமூக விரோத கும்பல் ஊடுருவி  இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில் பயணிகளிடம்  திருடுவது கஞ்சா விற்பனை செய்வது, செல்போன்களை பறிப்பது, மதுபோதையில் ரயில்  நிலையத்திலேயே படுத்து உறங்குவது உள்ளிட்ட சமூக விரோதிகளும் நடைபயிற்சி  மேற்கொள்ளும் பொதுமக்களிடையே கலந்திருப்பதால் ரயில்வே போலீசாரால் எவ்வித  நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்து வந்தது.

 இதை கட்டுப்படுத்த பழனி  ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் ரயில்  நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட உடுமலை நகர் வாசிகளை தனித்தனியே  சந்தித்து நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் பூங்கா, நேதாஜி மைதானம் போன்ற இடங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் படியும் அவர் அறிவுறுத்தினார்.ரயில்வே  போலீசாரின் எச்சரிக்கையை மீறி உடுமலை ரயில்நிலைய பிளாட்பாரங்களில் பொழுது  போக்குவதாக அமர்ந்து கதை பேசுவது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றில்  ஈடுபட்டால் இனிமேல் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை செய்தார்.

Tags :
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு