×

35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ககும் தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மாநாடு

திருப்பூர், நவ. 7: எழுமின் அமைப்பின் சார்பில் 35 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு குறித்து அறிவிப்பு கூட்டம் நேற்று திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  எழுமின் அமைப்பு நடத்தும் மூன்றாம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு நவம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் நடக்கிறது. இதில் மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், கத்தார், குவைத், பஹ்ரைன், ஸ்ரீலங்கா, மொரிசியஸ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளிகளை சந்திக்கவும், தொழில் வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவும் இந்த மாநாடு வாய்ப்பாக அமையும். இதில் பல தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

இது குறித்து எழுமின் நிறுவனர் ஜெகத் கஸ்பார் கூறியதாவது:  ‘‘இந்த மாநாட்டின்போது மிக முக்கியமான பல அனைத்துலக தமிழர் தொழில் வணிக வளர்ச்சிக்கான அமைப்புகளும் தொடங்கப்படவுள்ளன. அனைத்துலக தமிழ் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் கூட்டமைப்பு, அனைத்துலக தமிழ் பட்டயக்கணக்கர்கள் மற்றும் நிதி மேலாண்மையாளர்கள் கூட்டமைப்பு, அனைத்துலக தமிழ் சில்லறை வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு, தமிழருக்கான வங்கி நிறுவுதல், தமிழர் தயாரிப்புகள், சேவைகளை சந்தைப்படுத்த அனைத்துலக அளவிலான சிறப்பு நிறுவனம் போன்றவை முக்கியமானவையாகும். மேலும் 50 க்கும் மேற்பட்ட நிபுணர்களின் கருத்துரைகளும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பெண் தொழில் முனைவோர்கள், மாணவ தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு நுழைவு கட்டணம் கிடையாது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் எழுமின் அமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் அரிமா ஜெயசேகரன், தொழிலதிபர் சிவராமன், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் திட்ட இயக்குனர் குமார் துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Tamil ,talent conference ,countries ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...