×

ஊட்டி ஜிம்கானா கிளப்பில் 34 ஏக்கர் வன நிலம் மீட்க நடவடிக்கை

ஊட்டி, நவ.7: ஊட்டியில் உள்ள ஜிம்கானா கிளப் கைவசம் உள்ள 34 ஏக்கர் வன நிலத்தை மீண்டும் வனத்துறை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 50 ஆண்டுக்கு முன் இது போன்ற வனத்துறை நிலங்களை பல்வேறு துறைகள் மற்றும் தனியார் குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர்.  இதில், ஜிம்கானா கிளப் மிகவும் பழமையானது. கடந்த 1896ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவக்கப்பட்டது. துவக்கத்தில் வேட்டையாடுபவர்கள் கூடும் கிளப்பாக இருந்தபோதிலும், நாளடைவில் கால்ப் விளையாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 78 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் புல் மைதானங்கள் மற்றும் கால்ப் போட்டிகள் நடத்தப்படும் பகுதிகளாக உள்ள போதிலும், ஒரு பகுதி அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டுள்ளது. மேலும், குத்தகை பணம் பல ஆண்டுகளாக அரசு செலுப்படாத நிலையில், குத்தகை பாக்கி. ரூ.50 கோடியை தாண்டி விட்டது.

 இந்நிலையில், இந்த கிளப்பிற்கு சொந்தமான 78 ஏக்கரில் 34 ஏக்கர் பரப்பு வனங்களாக உள்ளதால், அதனை வனத்துறையினர் மீண்டும் கையகப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள அந்நிய தாவரங்களை அகற்றிவிட்டு சோலை மரங்களை நடவு செய்ய முடிவு செய்துள்ளனர்.  பல ஆண்டுகளாக வரியை செலுத்தாமல், அரசுக்கு டிமிக்கி கொடுத்து வரும் ஜிம்கானா கிளப்பின், கால்ப் மைதானத்தில் இருந்து ஒரு பகுதியை வனத்துறையினர் மீட்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடைய வரவேற்பை பெற்றுள்ளது.
 இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஜிம்கானா கிளப் வனத்துறை நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. 120 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த நிலத்திற்கு கட்ட வேண்டிய குத்தகை பணத்தை பல ஆண்டுகளாக கட்டாமல் உள்ளனர்.  இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், கால்ப் மைதானம்போக, மீதமுள்ள 34 ஏக்கர் நிலம் மரங்கள் மற்றும் புட்புதர்கள் வளர்ந்து சோலையாக காட்சியளிக்கிறது. அதனை நாங்கள் கையகப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

Tags : forest land ,Ooty Gymkhana Club ,
× RELATED ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைகூட...