விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டம்

பொள்ளாச்சி, நவ.7: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை,தென்னை மற்றும் மாட்டுத் தீவனப்புற்களை தின்றும்,அழித்தும் சேதம் விளைவித்து வரும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.உடுமலை அருகே மேற்குதொடர்ச்சி மலையோரம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட வல்லக்குண்டாபுரம் சுற்று மலையடிவாரத்தில் உள்ள ராவணாபுரம், ஆண்டியூர், பருத்தியூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 வாரமாக யானைக் கூட்டம் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதில் குறிப்பாக ஆண் யானை ஒன்று கூட்டத்தை விட்டு விலகி ஆண்டியூர் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னை,வாழைகளை தின்றும்,மிதித்து அழித்தும் சேதப்படுத்தி வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்  புளியம்பட்டி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார்(28) என்பவரை யானை தாக்கியதில் அவர் கை முறிந்து படுகாயம் அடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கவேலுவின் வீட்டை சேதப்படுத்தியதுடன், தோட்டத்து வேலிகளை துவம்சம் செய்தன. அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வாழைகளை மிதித்து சாய்த்தன.இரவு முழுவதும் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை, பகலில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று விடுகிறது. இதனால் வனத்துறையினர் அவற்றை எளிதாக விரட்ட முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் காட்டுயானையை விரட்ட விவசாயிகள் தங்களது தோட்டங்களை சுற்றி காலி மதுபாட்டில்களை கொடிகளாக கட்டி தொங்க விட்டனர். காலி மதுபாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று உரசும் ஒலி காரணமாக யானை தோட்டத்திற்குள் நுழையாது என நம்பினர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட எல்லையான ஆண்டியூர் பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் அர்த்தநாரி பாளையம் பகுதிக்கு காட்டு யானை இடம் பெயர்ந்து அங்குள்ள பகுதிகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டது.நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஆண்டியூர் எல்லைக்கு வ்நத யானையை  டார்ச்லைட் அடித்து விரட்ட முயற்சித்தனர். ஆனால் அது கிராம எல்லையை விட்டு நகரவில்லை. இதையடுத்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர்.ஆண்டியூர்,பருத்தியூர்,அர்த்தநாரிபாளையம் பகுதிக்குள்ளாக வலம் வரும் யானையை பிடிக்க பொள்ளாச்சி வனசரகர் காசிலிங்கம்,உடுமலை வனசரகர் தனபாலன் ஆகியோர் தலைமையில் வனவனர்,வனக்காப்பாளர்,வனக்காவலர் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர் ஆகியோர் நேற்று முன்தினமும், நேற்றும் அட்டகாச யானையை எவ்வாறு பிடிக்கலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.பொள்ளாச்சி வனசரகர் காசிலிங்கம் தலைமையில் யானையை பிடிக்க 3 குழு  அமைக்கப்பட்டுள்ளது. தலா 8 பேர் வீதம் 3 வாகனங்களில் வனத்துறையினர்  காட்டுயானையின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.யானையானது பகல்  நேரத்தில் வனத்திற்குள்ளும்,இரவு நேரத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து  அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும்  முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் தீப்பந்தம் காட்டியும்,பட்டாசு  வெடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 24 பேர் கொண்ட குழு மூலம் யானையை மீண்டும் விளைநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து 2 நாட்கள் இப்பணி தொடரும். யானையானது கோவை,திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் மாறி,மாறி இடம் பெயர்ந்து வருவதால் 3 குழுவாக பிரிந்து வனப்பகுதியை விட்டு வெளியேறாத வண்ணம் கண்காணித்து வருகிறோம் என்று கூறினர்.

Related Stories:

>