×

கோவை மாவட்டத்தில் 48,287 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பதிவு

கோவை, நவ. 7: நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காகவும், அரசின் திட்டங்களை எளிதில் கொண்டுசெல்லும் நோக்கிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள கை, கால்கள் ஊனம், மன வளர்ச்சி குன்றியோர், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்கள், கண்பார்வையற்றவர்கள், தசை சிதைவு நோய் உள்பட 21 பிரிவுகளின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யப்படுகின்றனர்.

கோவை மாவட்டத்தில், இதுவரை 48 ஆயிரத்து 287 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்பவர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரும் காலங்களில் இந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சலுகைகளையும் பெற முடியும். இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கட்டாயமாக அடையாள அட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெயர் உள்பட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
 இதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான மருத்துவச் சான்று, ஆதார் அட்டை, இருப்பிடத்துக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டுவர வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் அசல் சான்றிதழ்களாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பதிவு செய்து அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்களும் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மேற்கொண்டு புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார்.

Tags : IDPs ,Coimbatore District ,
× RELATED பெண் தொடர்பு காரணமாக போலீஸ்காரர் கொலை: விசாரணையில் திடுக் தகவல்