×

உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசார் பட்டியல் தயாரிப்பு

ஈரோடு, நவ.7: உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசாரின் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான தேதி விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை  தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், காவல்துறையில் ஒரே ஸ்டேஷனில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் குறித்த பட்டியல் தயாரித்து அனுப்பி வைக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீசாரின் பட்டியலை மாவட்ட காவல்துறை நிர்வாகம் சேகரித்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசாரின் விபரங்களை சேகரித்து அனுப்பும் படி உத்தரவிடப்பட்டுள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் போலீசாரின் பட்டியலை சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 3 ஆண்டு நிறைவடையாமல் உள்ளூரில் பணியாற்றும் போலீசாரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது நிறைய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதால் இந்த முறை குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.பெயர் பட்டியலில் உள்ள போலீசார் வரும் 15ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளதால் பெயர் பட்டியல் சேகரிப்பு பணி நிறைவடைந்து, விரைவில் இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு வெளியிடப்படும்.

இதேபோல், உள்ளாட்சி தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையிலும், தகவல்களை சேகரிக்க வசதியாகவும் காவல்துறை சார்பில் தனி கட்டுப்பாடு அறை திறக்கப்பட உள்ளது. இந்த கட்டுப்பாடு அறையில் டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கட்டுப்பாடு அறை திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : election ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...