×

மேட்டூர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

பவானி, நவ.7: பவானியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேட்டூர் மேற்குகரை பாசன வாய்க்கால் குறித்து  வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் வாய்க்கால் பாசனம் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரைக்கும் பாய்ந்து, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றிலும், பவானி ஆற்றிலும் கலக்கிறது.இந் நிலையில், மேட்டூர் அணையின் மேற்குகரை வாய்க்கால் கடைமடைப் பகுதிகளில் வாய்க்கால், அதன் கரைகள் சட்டவிரோதமாக முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. வாய்க்காலுக்கு அருகில் வசிப்போர், சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியும், கழிவறைகள் கட்டியும், பாதை வசதி ஏற்படுத்தியும் வாய்க்காலை ஆக்கிரமித்து உள்ளனர்.

இதனால், வாய்க்கால் பல்வேறு இடங்களில் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறந்தாலும், கரைமடைப் பகுதியான பவானி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை எனப் புகார் எழுந்தது. இந் நிலையில், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், பவானி தாசில்தார் பெரியசாமி, பவானி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாமிநாதன், தங்கதுரை, செல்வம் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.அப்போது, வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்து மேட்டூர் மேற்குக்கரை பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கவின் கே.ஆர்.பழனிச்சாமி அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார். முறையாக அளவீடு செய்யப்பட்டு, பாசன வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, தண்ணீர் தடையின் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Tags : Mettur Irrigation Drain ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...