சத்தி அருகே லாரிகள் மோதல்:டிரைவர் பலி

சத்தியமங்கலம், நவ.7: சத்தியமங்கலம் அருகே லாரிகள் மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து பிராய்லர் கோழிபாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம், மைசூர் சென்று கோழிகளை இறக்கிவிட்டு மீண்டும் மைசூரில் இருந்து பல்லடம் செல்வதற்காக சத்தியமங்கலம்- மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை, காரமடையை சேர்ந்த டிரைவர் சந்தோஷ் (23) ஓட்டினார். பல்லடத்தை சேர்ந்த மற்றொரு டிரைவர் கருப்புசாமி (35), லோடுமேன் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் புதுவடவள்ளி முருகன் கோயில்மேடு அருகே முன்னால் சென்ற லாரி மீது சந்தோஷ் ஓட்டிச்சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ், கருப்புசாமி, சுப்பிரமணி 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், கருப்புசாமி செல்லும் வழியிலேயே பலியானார். காயம்பட்ட இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

>