×

நெற்பயிரில் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடிக்க வேண்டும் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, நவ. 7: நெற்பயிரில் அதிக மகசூல் பெற திருந்திய நெல்சாகுபடி முறையை கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். புதுக்கோட்டை அன்னவாசல் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றிய விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. அன்னவாசல் வட்டாரம் ஆரியூர் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியைத் துவக்கி வைத்து பேசிய அன்னவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பழனியப்பா, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நெல் விதைகள், நுண்ணூட்ட உரங்கள், செயல் விளக்கங்கள், நுண்ணுயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் மானிய விபரங்களை விளக்கமாக எடுத்து கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் பற்றியும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றியும் விளக்கிக் கூறினார். மேலும் நெற் பயிரில் அதிக மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடி முறையைக் கடைப்பிடிப்பது பற்றியும் விளக்கிக் கூறினார். புதுக்கோட்டை தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட தொழில் நுட்ப உதவியாளர் கார்த்திக், தரமான நெல் விதையை உப்புக் கரைசல் கொண்டு தேர்ந்தெடுப்பது பற்றியும், பொட்டாஷியம் கரைசல் கொண்டு விதை கடினப்படுத்துதல் பற்றியும், சு+டோமோனாஸ், அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி செய்வது பற்றியும் செயல் விளக்கம் செய்து காட்டினார். பயிற்சியில் சுமார் 35 விவசாயிகள் கலந்து கொண்டனர், பயிற்சியின் போது கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில் நுட்ப கையேடு, குறிப்பேடு, பேனா ஆகியன வழங்கப்பட்டது. முடிவில் வேளாண்மை அலுவலர் சபீக்கா பாத்திமா நன்றி கூறினார்.

Tags : Agricultural Officer ,
× RELATED வரும் 17 முதல் 19 வரை நடக்கிறது: உதவி...