×

யோகா பலன்கள் அளவிட முடியாதவை

புதுக்கோட்டை, நவ.7: புதுக்கோட்டையில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சியை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் விஜயலட்சுமி துவக்கி வைத்து யோகா பயிற்சி மூலம் கிடைக்கும் பலன்கள் அளவிடமுடியாதது என்று கூறினார்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் சார்பில் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் உடல்வளம் மற்றும் மனவளம் பேண உடற்கல்வி ஆசிரியர்களுக்கான 3 நாட்கள் யோகா பயிற்சி புதுக்கோட்டை மௌண்ட்சீயோன் மெட்ரிக் பள்ளி அருகில் உள்ள வெள்ளாறு மனவளக் கலைமன்றத்தில் நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேசியதாவது: யோகா கலை என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சமன்பாட்டிற்கும் உதவும் கலை ஆகும். யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் செய்ய வேண்டும். யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிடமுடியாதவை.

எனவே யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும். அதுபோல் ஆசிரியர்கள் இங்கு பெறக்கூடிய பயிற்சியை மாணவர்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.பயிற்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பயிற்சியின் கருத்தாளர்களாக வெள்ளாறு மனவளக் கலைமன்ற பொறுப்பாளர் முத்துக்குமார், பயிற்றுநர் செல்லத்துரை, முத்துக்குமரேசன் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் 110 பேர் கலந்து கொண்டனர். இப் பயிற்சியானது நவம்பர் 6 முதல் நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags :
× RELATED சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்