×

வேதாரண்யம் தாலுகாவில் சம்பா சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதல்

வேதாரண்யம், நவ.7: வேதாரண்யம் தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களில் மஞ்சள்நோய் தாக்குதல் தென்படுவதால் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்க வேளாண்துறை ஆலோசனை வழங்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். வேதாரண்யம் தாலுகா பகுதிகளில் மேட்டூர் அணை நீர், மழை நீரை நம்பி ஆற்றுப்பாசனம், மானாவாரி வயல்களில் நேரடி நெல் விதைப்பு சுமார் 20 ஆயிரம் எக்டேரில் நடைபெற்றது. தற்போது சம்பா சாகுபடியில் களையெடுக்கும் பணியும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதியில் ஆற்றுப்பாசன மூலம் சாகுபடி செய்யப்படும் தலைஞாயிறு, ஓரடியம்புலம், வௌ்ளப்பள்ளம், பிராந்தியங்கரை, மூலக்கரை, மணக்காடு, வடமழை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்குதலும், இலை சுருட்டுப்புழு நோயும், ஆடைப்பாசி படிதலும் காணப்படுகிறது. களையெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் கடந்த வாரம் கடும் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் விவசாயிகள் களையெடுத்த பின்பு யூரியா தெளிக்க முடியாமல் அவதிப்பட்டனர். தற்போது ஓரளவு யூரியா தட்டுப்பாடு நீங்கிய நிலையில் சாகுபடியில் மஞ்சள் நோயும் பூச்சி தாக்குதலும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு விவசாயிகள் மருந்தடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் நேரடி நெல்விதைப்பு செய்யப்படாத வயல்களில் நடவுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் தாலுகா முழுவதும் முழுவீச்சில் களையெடுத்தல், நாற்று நடவு செய்தல், மருந்தடித்தல் போன்ற அனைத்து பணிகளும் நடைபெறுவதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்யத் துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் மஞ்சள் நோய், இலைசுருட்டுப்பூழு, ஆடைப்பாசி ஆகியவற்றில் இருந்து சம்பா சாகுபடியை காப்பாற்ற வேளாண்மைத்துறையினர் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : attack ,taluk ,Vedaranyam ,
× RELATED சேதுபாவாசத்திரம் கடைமடையில் முறை...