×

வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் காட்சி பொருளான புதிய நீர்தேக்க தொட்டி

வலங்கைமான், நவ.7: வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் புதிதாக கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து எப்போது இடிந்து விழுமே என்ற நிலை இருந்தது. இது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து பழுதடைந்த மேல் நிலைநீர் தேக்க தொட்டிக்கு அருகிலேயே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இருப்பினும் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் தற்போது காட்சிப் பொருளாகவே உள்ளது.

மேலும் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் தற்போது ஆபத்தான நிலையில் பழுதடைந்துள்ள பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்தே பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் பழுதடைந்த நிலையில் தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சிறிய அளவிளான தரைமட்ட தொட்டி உள்ளது. இத்தொட்டி பாதுகாப்பு அற்ற நிலையில் திறந்து உள்ளது.மேலும் அதில் தேங்கிஉள்ள தண்ணீரில் டெங்கு கொசு உருவாகும் நிலை உள்ளது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை சுற்றி அடர்ந்த செடிகள் காடுபோல் உள்ளது.எனவே அப்பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முடிவுக்கு கொண்டு வரவும், புதிதாக கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே திறந்த நிலையில் உள்ள தொட்டியை மூடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Valangaiman ,Alangudi ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...