×

கீழஅமராவதி ஊராட்சியில் அரசு பள்ளி கட்டிடத்தில் பெயர்ந்து விழும் கான்கிரீட்

வலங்கைமான், நவ.7: வலங்கைமான் அடுத்த கீழஅமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள சிமென்ட் கான்கரீட்டுகள் பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளி சென்று வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த திருவோணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ அமரவாதி பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளிக்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில் ஏற்பட்ட சிறிய பழுதுகள் சரிசெய்யும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் பள்ளி கட்டித்தின் முன்பகுதியிலிருந்து சிமென்ட் காரைகள் அவ்வப்போது கீழே பெயர்ந்து விழுவது வழக்கம். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் எழுத்து பூர்வமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிமென்ட் காரைகள் எப்போது பெயர்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும், அதை சரிசெய்து தரவேண்டும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ட்டிருந்தது. இருப்பினும் இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் குடந்தை தீவிபத்திற்கு பிறகு பள்ளி பகுதியில் எளிதில் தீபற்றகூடிய பொருட்கள் இருக்க கூடாது என்ற நடை முறை உள்ள நிலையில் பள்ளியை சுற்றி முள்ளினால் ஆன வேலி அமைக்கப்பட்டிருக்கின்றது. எனவே முள்ளினால் ஆன வேலியை அகற்றிவிட்டு சுற்று சுவர் அமைத்திடவும், மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காதவாறு, உடனே வெளியேறும் விதமாக பள்ளி எதிரே உள்ள வடிவாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளது. அதனால் பள்ளி எதிரே மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. எனவே மிக குறைந்த நீளம் கொண்ட வடிவாய்க்காலை தூர்வாரவும், பழுதடைந்த பள்ளி கட்டத்தினை சரி செய்திடவும் அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government school building ,panchayat ,Amaravati ,
× RELATED கரூர் ஆண்டாங்கோவில் ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும்