×

காட்பாடி டெல் நிறுவனத்தை பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கை மேலாண் இயக்குனர் தலைமையில் பெங்களூரு செல்கிறது, உயர்மட்டக்குழு

வேலூர், நவ.7:காட்பாடி டெல் நிறுவனத்தை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக டெல் மற்றும் ஆவின் மேலாண் இயக்குனர் தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று பெங்களூரு செல்கிறது.காட்பாடியில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் டெல் தொடர் நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள், நிர்வாக பணியாளர்கள் 90 சதவீதம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 10 சதவீதம் பேர் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்.இந்நிலையில், டெல் தொழிற்சாலையை தங்கள் வசம் எடுத்து நடத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அருவங்காடு ராணுவ தளவாட தொழிற்சாலை தரப்பில் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கேற்ப ராணுவ தளவாட தொழிற்சாலை தரப்பில் உயர்அதிகாரிகள் டெல் நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அந்த முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. தொடர்ந்து தனியார் வெடிமருந்து நிறுவனம், ஆவின் நிறுவனம் ஆகியன டெல் வளாகத்தை கையில் எடுக்க திட்டமிட்டு அம்முயற்சியும் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டெல் நிறுவனத்தை தங்கள் வசம் எடுத்து ஏவுகணைகளில் மருந்து நிரப்பும் மையமாக மாற்றவும், அதற்கான வெடிமருந்தை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டது. இதற்காக பெல் நிறுவன குழுவினர் பலமுறை டெல் நிறுவன வளாகத்தையும், இயந்திர தளவாடங்களையும் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து தமிழக அரசுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, டெல் நிறுவனத்தை குத்தகை எடுத்து நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மூடப்பட்ட தொழிற்சாலைக்கு புத்துயிர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதுடன், ஓரிரு மாதங்களில் டெல் நிறுவனம் பெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக உற்பத்தியை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கேற்ப டெல் நிறுவனத்தை பெல் நிறுவனத்திடம் முறைப்படி ஒப்படைப்பது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த டெல் மேலாண்மை இயக்குனரும், ஆவின் மேலாண்மை இயக்குனருமான காமராஜ் தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று பெங்களூருவுக்கு பயணமாகிறது.இதுதொடர்பாக டெல் மேலாண்மை இயக்குனர் காமராஜிடம் கேட்டபோது, ‘டெல் நிறுவனம் குத்தகை மற்றும் பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எனது தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று பெங்களூரு செல்கிறோம்’ என்று கூறினார்.

Tags : Managing Director ,Bell ,Bangalore ,
× RELATED சென்னை மாநகர போக்குவரத்துக் கழக...