×

சுற்றுலாதலமான ஏலகிரியில் பரபரப்பு 50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்

* செம்மரக் கடத்தலில் தொடர்பா? * ஆந்திராவிற்கு போலீசார் விரைவு

ஜோலார்பேட்டை, நவ.7: ₹50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில், அவருக்கு செம்மரக்கடத்தல் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ஆந்திரா சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சுற்றுலாதலமான ஏலகிரியில் உள்ள அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் அருள்(45). இவர் ஏலகிரி மலையில் கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏலகிரி மலையில் நிலம் மற்றும் வீட்டுமனை வாங்குவதற்காக பலர் இவரை தேடி வந்துள்ளனர். இதனால், இவருக்கு பலரின் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வழக்கம்போல் ஏலகிரி மலையில் உள்ள கொட்டையூர் பகுதியில் வாக்கிங் சென்றார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரின் தலையில் துணியை போர்த்தி காருக்குள் ஏற்றி மின்னல் வேகத்தில் அங்கிருந்து கடத்திச் சென்றனர்.இதையடுத்து, அரை மணி நேரம் கழித்து அருளின் மகன் ராபின் செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய அவருடைய தந்தை அருள், தன்னை மர்ம நபர்கள் கடத்தி உள்ளதாகவும் ₹10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வரும்படி கூறியுள்ளார்.பின்னர், அவரது மகன் ராபின் பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது மீண்டும் ராபினின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ₹50 லட்சம் கொடுத்தால் மட்டுமே உனது தந்தையை உயிரோடு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அருளின் மனைவி சாந்தி ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கடத்தல் கும்பலை பிடிக்க டிஎஸ்பி தங்கவேல் தலைமையில், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி உட்பட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் ராபினின் செல்போனை ஆய்வு செய்தபோது, கடத்தல் கும்பல் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் உள்ளதாக சிக்னல் காண்பித்தது. இதையடுத்து போலீசார் குப்பம் பகுதிக்கு விரைந்தனர். மேலும், அருளுக்கு செம்மரக்கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.₹50 லட்சம் பணம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Yelagiri ,
× RELATED பெங்களூரு தொழிலதிபரின் அட்ராசிட்டி 10...