×

குழந்தை திருமணம் தடுக்க வேண்டும்

திருவள்ளூர், நவ. 7: குழந்தை திருமணம் நடைபெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நீதிபதி  பேசினார். திருவள்ளூரில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட நீதிபதி செல்வநாதன், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசுகையில், ‘’குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக கண்காணித்திட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்துபவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்’’’’ என்றார். மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் பேசுகையில், ‘’பாதுகாப்பு இல்லங்களில் உள்ள  ஒவ்வொரு குழந்தையையும் அலுவலர்கள் தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். அதற்கு உண்டான பொறுப்பு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உண்டு.

ஆதரவற்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், போதை பொருட்கள் பயன்படுத்தும் குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க வழிவகை செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறாத வகையில் சைல்டு லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியோர் இணைந்து, அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’’’ என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அரவிந்தன், உரிமையியல் நீதிபதி ஜி.சரஸ்வதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED அக்கா, தங்கைக்கு குழந்தை திருமணம்: சமூக நலத்துறையினர் மீட்டனர்