×

போராட்டம் நடத்த போவதாக தகவல் ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு

சென்னை, நவ. 7: சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் சார்ந்த ரத்த பரிசோதனை, ரேடியோலஜி, டயாலிசிஸ் டெக்னீஷியன், இசிஜி டெக்னிஷியன், கார்டியோ டெக்னிஷியன் உள்பட 15 மருத்துவம் சார்ந்த பட்டய பாடப் பிரிவில் 100க்கும் மேற்பட்ட வெளியூர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு மாணவிகள் தங்கியுள்ள விடுதி மிகவும் பழுதான நிலையில் இருப்பதாக கூறி, நேற்று முன்தினம் அந்த விடுதியை மருத்துவமனை நிர்வாகம் பூட்டிவிட்டது. இதனால் அங்கு தங்கியுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களது உடமைகள் அறைக்குள் இருப்பதால் வெளியேற முடியாமல் தவித்தனர். இதையடுத்து பட்டய படிப்பு படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விடுதியில் தங்கியுள்ள மாணவ-மாணவிகள், வேறு எங்கு சென்று தங்குவது? என தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று 2வது நாளாக மருத்துவ பட்டய படிப்பு மாணவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதன் பேரில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள டீன் அலுவலகம், ஆர்எம்ஓ அலுவலகம் உள்ளிட்ட மருத்துவமனை வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதற்கிடையில் பட்டய மாணவர்கள் தரப்பில் பேராசிரியர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து மாணவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : protest ,Stanley Hospital ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...