முத்தாபுதுப்பேட்டையில் மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கும் தெருக்கள்

ஆவடி : ஆவடி மாநகராட்சி, முத்தாபுதுப்பேட்டை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக மின்விளக்குகள் எரியாததால் தெருக்கள் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் மக்கள் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆவடி மாநகராட்சி 46வது வார்டில் முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகர், குளக்கரை தெரு அமைந்துள்ளது. இந்த  தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள கம்பங்களில், பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் அனைத்து தெருக்களும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் இரவில் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘முத்தாபுதுப்பேட்டை, குளக்கரை தெரு மற்றும்  5 குறுக்கு தெருகளில் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலின்போது அனைத்து மின் விளக்குகளும் உடைந்து சேதமானது. அதன் பிறகு அந்த விளக்குகள் சரிவர பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. இப்போது, அங்குள்ள தெருக்களில் அனைத்து மின் விளக்குகளும்  எரிவதில்லை. இதனால் இரவில் தெருக்கள் இருள் சூழ்ந்து கிடக்கிறது.

இதனை பயன்படுத்தி வேலை முடிந்து வரும் பெண் தொழிலாளர்களிடம் சமூக விரோதிகள் செயின் பறிப்பு, சில்மிஷம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் அவசர தேவைக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. இரவில்  நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை  நாய்கள் விரட்டி கடிக்கின்றன.  மேலும், அப்பகுதியில் குண்டும் குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் இரவில் வர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், தெருக்கள் இருளில்  கிடப்பதால் போலீசார் பைக்கில் சரியாக ரோந்து பணியில் ஈடுபடுவதும் கிடையாது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக

உள்ளனர். எனவே, இனியாவது முத்தாபுதுப்பேட்டை, குளக்கரை தெருவில் எரியாத மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆவடி நகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

Related Stories:

>