×

அச்சிறுப்பாக்கத்தில் ஹெல்மட் விழிப்புணர்வு ஊர்வலம்

மதுராந்தகம், நவ. 7: மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. அச்சிறுப்பாக்கம் போலீசார் மற்றும் அச்சிறுப்பாக்கம் கோயில் நகர லைன் சங்கம், ரோட்டரி சங்கம், ஜிஎம்ஆர் வரலட்சுமி பவுண்டேஷன், வணிகர் சங்கம், மதுராந்தகம் பத்திரிகையாளர்கள் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. அச்சிறுப்பாக்கம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கூட்ரோடு,  பஜார் வீதி உள்பட பல முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக் கூடாது, 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷமிட்டு சென்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...