×

படப்பை ஊராட்சியில் தெருக்களில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகள்

ஸ்ரீபெரும்புதூர், நவ. 7: படப்பை ஊராட்சியில் உள்ள தெருக்களில் பன்றிகள் கூட்டமாக சுற்றி திரிந்து, குப்பைகளை கிளறி விடுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் படப்பை, கீழ் படப்பை, பெரியார் நகர், விஷ்ணு நகர், சண்முகா நகர், ஆத்தனஞ்சேரி, கேகே நகர், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். படப்பை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் உள்பட 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. படப்பை ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களை கொண்டு சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மணிமங்கலம் - புஷ்பகிரி சாலையில் கொட்டி சேகரிக்கப்படுகிறது. இங்குள்ள கோழி, ஆடு, மாடு இறைச்சி விற்பனை கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகளை, குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.

தற்போது படப்பை ஊராட்சியில் முறையாக குப்பை அகற்றப்படுவதில்லை. ஆங்காங்கே சாலை, தெருக்களின் ஓரங்களில் கொட்டுவதால், குப்பை மலைபோல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பெய்து வரும் மழையால், குப்பைகளில் மழைநீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில், படப்பை ஊராட்சியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய் மற்றும் பன்றிகள், குப்பையில் உள்ள இறைச்சி கழிவுகளை சாப்பிடுகின்றன. இதற்காக அவை, மலைபோல் குவிந்துள்ள குப்பையை கிளறி விடுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சி முழுவதும் சுற்றி திரியும் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னைக்கு அருகில் அமைந்துள்ள படப்பை ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மக்கள் தொகையும் அதிகரிக்கிறது. இந்த ஊராட்சியில் முறையாக துப்புரவு பணிகள் நடக்கவில்லை. இதனால், பெரும்பாலான தெருக்களில் குப்பை, இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது. ஊராட்சி முழுவதும் 500க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றி திரிகின்றன. குடியிருப்புகளில் பன்றிகள் தஞ்சமடைகின்றன. இதையொட்டி, அப்பகுதி மக்கள் கடும் சிரமமடைகின்றனர். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

Tags : streets ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...