×

காஞ்சிபுரம் மேட்டு தெருவில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் கடும் துர்நாற்றம்

காஞ்சிபுரம், நவ.7: காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள குப்பை தொட்டியில் இறைச்சி கடையில் இருந்து வெளியேறும் கழிவுகளை கொட்டுவதால், அப்பகுதியை சுற்றி கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். காஞ்சிபுரம் மேட்டுத்தெரு வழியாக வந்தவாசி, செய்யாறு மற்றும் சுற்றுப்புற கிராமங்களான தூசி, மாமண்டூர், அய்யங்கார் குளம், வெம்பாக்கம் உள்பட பல பகுதிகளுக்கு பைக், பஸ் உள்பட பல்வேறு வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் நகரின் முக்கிய பகுதி என்பதால், இங்கு ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் சேரும் குப்பைகளை கொட்ட நகராட்சி சார்பில், அந்த தெருவில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத் தொட்டியில் சில வியாபாரிகள் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை வீசி செல்கின்றனர். ஈரமான கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அடிக்கடி மழை பெய்வதால், அப்பகுதி சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

இதனால், வியாபாரிகள் கடைகளில் அமர்ந்து வியாபாரம் செய்ய முடியவில்லை. வீடுகளில் இருந்து கொண்டு வரும் சாப்பாடு சாப்பிட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதாக வியாபாரிகள் புகார் கூறுகின்றனர். மேலும் நகராட்சி நிர்வாகமும் தினமும் குப்பைகளை அகற்றாததால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதாக கூறுகின்றனர். எனவே, மேட்டு தெருவில் உள்ள குப்பை தொட்டியில் இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது என அறிவுறுத்துவதுடன், தினமும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : street ,
× RELATED ராயனூர் சாலையில் கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க கோரிக்கை