×

மாவட்டத்தில் கை கொடுக்காத வடகிழக்கு பருவமழை நிரம்பாத ஏரிகளால் விவசாயிகள் வேதனை

திருப்போரூர், நவ.7: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழை சரிவர கை கொடுக்காததால், மாவட்டத்தில் பல ஏரிகளில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழிலான விவசாயம் ஒவ்வொரு ஆண்டும் தனது கம்பீரத்தை இழந்து வருகிறது. திருப்போரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்தூர், காஞ்சிபுரம், செய்யூர், லத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களில் உள்ள 100 சதவீத கிராமங்களில் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக நடந்து வந்தது.
இதில், பெரும்பாலும் ஏரிப்பாசன விவசாயமே நடைபெற்று வந்தநிலையில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் பாலாற்றை நம்பி விவசாயம் நடந்தது. திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகள் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளாக இருப்பதால், அபரிமிதமான வளர்ச்சி காரணமாக விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், மென்பொருள் நிறுவனங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.

இதனால், இந்த 2 ஒன்றியங்களிலும் 80 சதவீத நிலங்கள் விவசாய களையை இழந்து காணப்படுகின்றன. தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, மண் தரம் குறைந்து விவசாயம் செய்ய லாயக்கற்றதாக நிலங்களாக மாறி விட்டன. பல விவசாய நிலங்களில் வேலிக்காத்தான் எனப்படும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, விவசாயிகளின் வயிற்றில் முள் படுக்கையை விதைத்துள்ளன. ஓரிரு இடங்களில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, விவசாய கூலித் தொழிலாளர்கள் கிடைக்காத நிலையே பெரும்பாலன இடங்களில் நிலவுகிளது. அதிக கூலி கிடைப்பதால் விவசாய தொழிலாளர்கள் டைல்ஸ், மார்பிள் ஒட்டுதல், கொத்தனார், பெரியாள், கட்டிட மேஸ்திரி போன்ற வேலைகளை கற்றுக் கொண்டு அந்த வேலைகளை செய்யத் தொடங்கி விட்டனர். மேலும், 20 சதவீத அளவுக்கே விவசாயம் நடக்கும் கிராமங்களில் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழைக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததாலும், பெய்த மழைநீரை நீர்வரத்துக் கால்வாய்களின் ஆக்கிரமிப்பு காரணமாகவும் ஏரிகளில் தண்ணீர் தேக்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருப்போரூர் ஒன்றியத்தில் தையூர், கொண்டங்கி, சிறுதாவூர் ஆகிய 3 ஏரிகளும் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளின் கணக்கில் வருகின்றன. மேலும் மானாம்பதி, ஆமூர், தண்டலம், கரும்பாக்கம் ஆகிய கிராமங்களில் பெரிய ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக அவ்வப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி தென் மாவட்டங்களில் பரவலாக நன்றாக பெய்தாலும், வட மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே பெய்துள்ளது.
அவ்வாறு பெய்து கிடைத்த மழைநீரும் முறையாக ஏரிகளை சென்று அடையாததால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் இல்லாமல் குட்டைபோல் காணப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால் ஏரிகளில் சிறிதளவு குட்டைபோன்று தேங்கி இருக்கும் தண்ணீரை இறைத்தும், லாரிகளில் தண்ணீர் வாங்கியும் அடுத்த போக விவசாயத்தை செய்ய வேண்டிய அவலநிலை ஏற்படும் என விவசாயிகள் புலம்புகின்றனர். இந்தாண்டு பருவமழையும் தங்களை கைவிட்டு விட்டதாகவும் அவர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.

பெரும்பாலான விவசாயிகள் தங்களின் விளை நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் மேய்ச்சல் நிலங்களில் புல் கூட முளைக்கவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல் மாடுகளை பலர் விற்றுவிட்டனர். இதனால், கிராமங்களில் மாடுகளின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்து விட்டது. மாடுகளை இழந்ததால் பால் விற்பனை செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள் விவசாயத்துக்கு தேவையான நீரைத் தருவதோடு பல்வேறு கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதுபோன்று கிராமப்புற மக்களின் குடிநீர், கால்நடைகளின் நீராதாரம் போன்றவற்றை பாதுகாக்க அனைத்து ஏரிகளையும் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சீரமைப்பதோடு ஏரி, குளங்களையும், நீர்வரத்துக் கால்வாய்களையும் ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இப்பணியில் வருவாய்த் துறையினரை ஈடுபடுத்தி ஏரிகளை காக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags : lakes ,monsoon ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 71.91 சதவீதம் நீர் இருப்பு..!!