×

ரத்ததான முகாம் நடத்த போலீசார் கெடுபிடி

தாம்பரம், நவ. 7: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் அதிகளவில் வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக மருத்துவமனை சார்பில் தமுமுக ரத்த வங்கியில் ரத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, தமுமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று, ரத்த தான முகாம் நடக்க இருந்தது. இதற்காக, தாம்பரம் போலீசில், தமுமுக சார்பில் ரத்ததான முகாம் நடத்துவதற்கு அனுமதிக்கும்படி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார், அதற்கு சம்மதிக்கவில்லை. ரத்ததான முகாமுக்கு அனுமதி கொடுக்காமல் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். இதையடுத்து, தமுமுகவினர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து, ரத்ததான முகாம் நடத்துவதற்கு அனுமதியளித்தனர். ஆனாலும் போலீசார் ரத்ததான முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாகனத்தை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.

இதையொட்டி, நீண்ட நேரமாக நடந்த வாக்குவாதத்துக்கு பின் போலீசார், அங்கேயே வாகனத்தை நிறுத்தி ரத்தத்தை பெற அனுமதி அளித்தனர்.
இதை தொடர்ந்து குறைந்த அளவிலான பொதுமக்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் திடீர் கெடுபிடி காரணமாக ரத்தம் தானம் பெற வந்த அரசு பொது மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ரத்த தானம் செய்ய வந்த பொதுமக்கள் கடும் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து தமுமுக நிர்வாகிகள் கூறுகையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு ரத்த பற்றாக்குறை இருப்பதாக கூறி மருத்துவமனை சார்பில் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நாங்கள் ரத்ததான முகாம் நடத்த முடிவு செய்தோம்.

ஆனால், தாம்பரம் போலீசார் இந்த அவசர ரத்ததான முகாமுக்கு அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வந்த வாகனத்தை அப்புறப்படுத்தும்படி கூறி தகராறில் ஈடுபட்டனர். பின்னர், ஒரு கட்டத்தில் அவர்களது எதிர்ப்பை மீறி ரத்ததான முகாம் நடந்தது. இதுபோன்ற பொதுமக்களின் அவசிய தேவைக்கு காவல்துறை  அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது
என்றனர்.

Tags : bloodbath camp ,
× RELATED சிறப்பு ரத்ததான முகாம்