×

கல்பாக்கம் அருகே வாயலூர் பாலாற்றில் பக்கவாட்டு சுவர் இல்லாமல் கட்டப்படும் தடுப்பணை

திருக்கழுக்குன்றம், நவ.7: கல்பாக்கம் அருகே வாயலூர் பாலாற்றில், தடுப்பணைக்கு பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் விவசாயம் நிறைந்த கிராமங்கள் அடங்கியுள்ளது. இங்கு விவசாயத்துக்காக மிகப் பெரிய நீர் ஆதாரமாக பாலாறு அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த பாலாற்று பகுதியின் ஒரு சில கிராமங்களில் தனியார் மற்றும் அரசு மணல் குவாரிகள் நடத்தப்பட்டன. இந்த குவாரியை காரணம் காட்டி நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறி அதிகளவில் பாலாற்றில் பாதாளம் போன்று பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி மணல் எடுக்கப்பட்டது. இதனால், பாலாற்று பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதையொட்டி, விவசாயத்துக்கு போதிய நீர் கிடைக்காமல் போனது. இதற்கிடையில், மழைக்காலங்களில் பாலாற்றில் நிரம்பி வரும் மழைநீர் வீணாக கடலில் கலந்து விடுகிறது.

இந்த மழைநீரை அணைகட்டி தேக்கி வைத்தால் நிலத்தடி நீர் மட்டம் பெருகி விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்கும், விவசாயமும் நிலைக்கும் என்பதால் பாலாற்று பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் உண்ணாவிரதம், கண்டன ஆர்பாட்டம், நடைபயணம், மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் பாலாற்றின் குறுக்கே கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சார்பில் 32.5 கோடி மதிப்பில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு அது முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், அந்த தடுப்பணையின் பக்கவாட்டில் (சுவர்) கரை ஏதும் கட்டப்படாமல் உள்ளது. இதனால், பெருவெள்ளம் ஏற்பட்டால், பாலாற்றில் நிரம்பி வரும் மழைநீர், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகும் அபாய நிலை உள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள பாலாற்றில் மழைகாலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கி வைக்க ஒரு தடுப்பணை வேண்டும் என பல்வேறு போராட்டத்தை நடத்தினோம். இதையடுத்து, வாயலூர் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு அது முடியும் தருவாயில் உள்ளது.

பொதுவாக தடுப்பணை என்றால் பாலாற்றின் குறுக்கே 2 பக்க வாட்டு கரைகளையும் கட்டியபின்னர், தடுப்பணை கட்டுவார்கள். ஆனால் இங்கே பாலாற்றின் குறுக்கே மட்டும் அணை கட்டி விட்டு, பக்கவாட்டு கரையை பலப்படுத்துவதற்கான எவ்வித பணிகளும் மேற்கொள்ளாமல் விட்டுள்ளனர். இதனால், அந்த பகுதி மணல் கரையாகவே உள்ளது. பெரும் வெள்ளம் வந்தால் தண்ணீரில், அந்த பக்கவாட்டு மணல் கரையை கடந்து சென்று வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து விடும் அபாய நிலை உள்ளது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு போராட்டங்களுக்கு பின் 32.5 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் இரு புறமும் கரையை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளாததால் முழுமையான, நிறைவான தடுப்பணையாக இதை கருத முடியவில்லை என்றனர்.

இதுபற்றி பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 32.5 கோடிபு என்பது (மிக அருகாமையில் உள்ள) கடல்நீர் உட்புகாமல் இருக்கவும், பாலாற்று நீர் கடலில் கலக்காமல் தடுக்கவும் மட்டுமே. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. தடுப்பணையின் இரு கரை பகுதிகளிலும் பக்கவாட்டு (சுவர்) கரை அமைக்க திட்ட மதிப்பீடு செய்து, மேலும் நிதி ஒதுக்கினால் பக்கவாட்டு கரை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்’ என்றனர். எனவே, உடனடியாக வாயலூர் தடுப்பணையின் பக்கவாட்டு கரைகளை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு இந்த தடுப்பணை முழுமை பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Kalpakkam ,Vaalur Palace ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு வானியல் செயல்பாடுகள் குறித்து விளக்கம்