×

மதுராந்தகம் அருகே 6 மாதத்தில் அவசர கதியில் கட்டி முடித்த தரைப்பாலம் உள்வாங்கியது

செய்யூர், நவ. 7: மதுராந்தகம் அருகே அவசர கதியில் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட தரைப்பாலம் உள்வாங்கியுள்ளது. இதை கண்டு கொள்ளாத அதிகாரிகளால், தினமும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மதுராந்தகத்தில் இருந்து முதுகரை - பவுஞ்சூர் வழியாக கடலூர் கிராமம்  செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பைக்குகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்த 6 மாதங்களுக்கு முன் ஜமீன் எண்டத்தூர் ஏரிக்கு வரத்துக் கால்வாய் நீர் செல்வதற்காக பல லட்சம் மதிப்பில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணி முறையாக செய்யவில்லை. தரைப்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து, அதன் இருபுறமும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் முறையாக மண் அளிக்கவில்லை  என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையாலும், அவ்வழியாக வாகனங்கள் அதிக அளவில் சென்று வந்ததால், தரைப்பால கட்டுமானத்தின் இருபுறமும் சாலை உள்வாங்கியதோடு, சாலையின் குறுக்கே இருபுறமும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுசிறு விபத்துகள் சிக்கி காயமடைகின்றனர். இச்சாலை வழியாக புதிதாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பதை அறியாமல் அதில் விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த தரைப்பாலம் பணி நிறைவடைந்த நேரத்தில் பணியாளர்கள் சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு மண் குவியலை சாலையோரங்களிலேயே  விட்டு சென்றுவிட்டனர்.  இதுபோல் குவிக்கப்பட்ட மண் குவியல் தொடர் மழையின் காரணமாக சாலையோர கால்வாய்களில் சரிந்து வீணானது.

அந்த மண்ணை தரைப்பாலத்தின் இருபுறமும் முறையாக அனைத்திருந்தால் சாலை உள்வாங்கி இருக்காது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்த்து இருக்கலாம். மேலும், இந்த சாலை உள் வாங்கியது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலை துறையினர், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Maduranthankam ,bridge ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!