×

மின்கம்பங்கள், வயர்களை மாற்ற அறிவுறுத்திய கலெக்டர் உத்தரவு காற்றில் பறந்தது

திருப்போரூர், நவ.7: திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் 3,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி, பழைய மாமல்லபுரம் சாலையையொட்டி அமைந்துள்ளதாலும், நல்ல நீர்வளம், அமைதியான சூழல் உள்ள கிராம பகுதியாக இருப்பதாலும் இங்கு ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளன. மேலும், இங்கு மருத்துவக்கல்லூரி, 2 பெட்ரோல் நிலையங்கள், அரிசி ஆலைகள், வணிக வளாகங்கள், கலைக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவையும் உள்ளன. இங்கு கடந்த 1955ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசனால், மின் இணைப்பு கொண்டு வரப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டது.அப்போது, அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இருப்பினும், வயல்வெளி மற்றும் கால்வாய்களை ஒட்டி அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

இது மட்டுமின்றி நீண்ட காலமாக மின்வயர்களும் மாற்றப் படாமல் இருப்பதால் அவையும் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. இதுகுறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் இப்பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, அதே கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா மின்வாரிய அதிகாரிகளை அழைத்து உடனடியாக நெல்லிக்குப்பம் கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பங்கள், மின் வயர்களை மாற்றும்படி உத்தரவிட்டார். ஆனால், மாதங்களை கடந்த பின்பும் இதுவரை மின்வயர்களும், மின் கம்பங்களும் மாற்றப்படாத நிலை உள்ளது. எனவே, நெல்லிக்குப்பம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள அனைத்து மின்கம்பங்களையும், மின்வயர்களையும் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...