×

ஆண்டித்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றில் குப்பை கழிவுகள்

உத்திரமேரூர், நவ.7: உத்திரமேரூர் அருகே ஆண்டித்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றில் குப்பை கழிவுகள் கிடப்பதால, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். உத்திரமேரூர் அடுத்த ஆண்டித்தாங்கல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம் அருகே விநாயகர் கோயில், அரசு தொடக்கப்பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளின் நடுவே திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் குடிநீர் தேவைக்காக ந்த கிணறு பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுகிறது. இதனால் குடிநீர் வழங்கிய கிணற்றினை சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பயன்படுத்த தவறிவிட்டனர். இதனால் கிணறு பாழடைந்து காணப்படுகிறது.

மேலும் இந்த கிணற்று நீர் தொடர்ந்து பயன்படுத்தாததால் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை அதில் போட்டுள்ளனர். இதனல் பிளாஸ்டிக்குகள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் மிதந்து கழிவுநீராக மாறியுள்ளது. இந்த கிணற்று நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தும் அபாயம் நிலவுகிறது. திறந்தவெளியில் உள்ள கிணற்றால், பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள், திறந்தவெளி கிணற்று நீரை பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல் சீரமைத்து கிணற்றுக்கு மேல் மூடி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : well ,village ,
× RELATED தஞ்சை அரசு மருத்துவமனை சிறப்பாக...