×

கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரைகுறையாக நடைபெறும் சாலை விரிவாக்க பணி

கூடுவாஞ்சேரி, நவ. 7: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரைகுறையாக நடக்கும் சாலை விரிவாக்க பணியால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரண்டு மார்க்கத்திலும் 6வழி சாலை உள்ளது. இதில், நாளுக்கு நாள் பெருகி வரும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, தற்போது 8 வழி சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக சாலை விரிவாக்க பணி நடக்கிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக நெடுஞ்சாலைத் துறையினர் செயல்படுவதாகவும், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அரைகுறையாக சாலை விரிவாக்க பணி நடப்பதாகவும் பொதுமக்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், ஓட்டல்கள், தனியார் திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதனால், ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் சர்வீஸ் சாலை உள்ளது. ஆனால் பல இடங்களில் சர்வீஸ் சாலையே அமைக்காமல் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கிடப்பில் போட்டுவிட்டனர்.
இந்நிலையில், 6 வழி சாலையை 8 வழி சாலையாக மாற்றும் பணி நடக்கிறது. இதில் எந்நேரமும் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடிய வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தற்போது நடக்கும் சாலை விரிவாக்க பணியில் ஆளுங்கட்சியனருக்கு ஏற்றதுபோல் நெடுஞ்சாலைத்துறையினர் செயல்படுகின்றனர்.

இதில், ஆளுங்கட்சியினரின் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் கட்டிடங்களை சரிவர இடிக்காமல் உள்ளனர். மேலும் சர்வீஸ் சாலையில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சாலை விரிவாக்க பணி செய்ய வேண்டும். ஆனால், குறிப்பிட்ட அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அரை குறையாக சாலை விரிவாக்க பணிகளை செய்கின்றனர். மேலும், பணி நடைபெறுவதை நெடுஞ்சாலை துறையினர் கண்காணிப்பதும் கிடையாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம், ெபாதுமக்கள் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் தலையிட்டு சாலை விரிவாக்க பணிகளை விரைந்து, பாரபட்சமின்றி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Road ,Guduvancheri GST road ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் லாரி...