×

தேசிய வாலிபால் போட்டிக்கு ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி தேர்வு

பரமத்திவேலூர், நவ. 6: அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும், 65வது தேசிய அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டி, டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாடவுள்ள தமிழக அணிக்கான வீராங்கனைகள், முதல் கட்ட தேர்வு, தர்மபுரியில் மண்டல அளவிலான நடைபெற்றது. இதில்  நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, சுமார் 250 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மண்டல அளவில் முதல் 7 இடங்களை பிடித்த மாணவிகள், மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர். தொடர்ந்து 2ம்கட்ட மாநில அளவிலான தேர்வு போட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 56 மாணவியர்கள் கலந்து கொண்டனர். பல சுற்றுக்களில் மாணவியர்களின் தனித்திறன் மற்றும் குழுவாக சேர்ந்து விளையாடும் திறன்களை கொண்டு தேர்வு செய்யப்பட்டது.

இத்தேர்வில் பரமத்திவேலூர் அடுத்துள்ள பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி சம்ரிதா, தமிழக அணிக்காக தேர்வு பெற்றுள்ளார். இவர் ஆந்திரா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில், தமிழக அணிக்காக விளையாட உள்ளார்.  தமிழக அணிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவி சம்ரிதாவை, ஆர்என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூரணம் மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : RN for National Volleyball Tournament Oxford School Student Exam ,
× RELATED இரண்டு நாள் சிறப்பு முகாமில்...