×

ராசிபுரம் அருகே பரபரப்பு அரசு பஸ்சை மறித்து டிரைவரை தாக்கிய இளைஞர்கள்

ராசிபுரம், நவ.6:  ராசிபுரம் அருகே விபத்து ஏற்படுத்தும்படி அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவரை இளைஞர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டிஎஸ்பி நேரடி விசாரணை நடத்தினார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து நேற்று மாலை  ஈரோட்டிற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் லட்சுமணன் என்பவர்  ஓட்டிச் சென்றார். ராசிபுரம் பழைய நீதிமன்ற வளாகம் அருகே செங்குட்டு விநாயகர் கோயில் அருகே முன்னாள் இருசக்கர வாகனத்தில்  குழந்தையுடன் சென்றவர் மீது, இடிப்பது போல் பஸ்சை லட்சுமணன் ஓட்டிச்சென்றுள்ளார்.  இதில், நிலை தடுமாறிய அந்த நபர், சுதாரித்துக்கொண்டு சாலையோரம் இருசக்கர வாகனத்தை  நிறுத்தியதுடன், டிரைவரை திட்டியுள்ளார். மேலும், நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆர்.கவுண்டம்பாளையத்தில் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். அப்போது, பிரசாத் என்பவர், விபத்தை ஏற்படுத்தும் விதமாக பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் லட்சுமணனிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சரமாரி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருமடங்களிலும் நீண்டதூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்த தகவலின்பேரில், ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று  தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து வாகனப்  போக்குவரத்தும் சீரானது. தொடர்நது சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்களை,  டிஎஸ்பி எச்சரித்து அனுப்பி வைத்தார். அரசு பஸ்சை மறித்து டிரைவரை  தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து யாரையும் கைது  செய்யவில்லை. இதுபோன்ற சம்பவம்  அடிக்கடி  நடந்து  வருவது  தொடர்கதையாகி விட்டது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : bus crash ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து